கதண்டு கடித்து தொழிலாளர்கள் 26 பேர் காயம்
புள்ளம்பாடி அருகே கதண்டு கடித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 26 பேர் காயம் அடைந்தனர்.
புள்ளம்பாடி அருகே கதண்டு கடித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 26 பேர் காயம் அடைந்தனர்.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள்
புள்ளம்பாடி அருகே திண்ணகுளம் ஊராட்சியில் நேற்று காலை அரசத்தம்மன் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நீர்வரத்து வாய்க்கால் கரைகளில் இருந்த கதண்டுகள் தொழிலாளர்களை கடித்தது.
இது குறித்து சக பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாஅரசகுமாரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அவர் காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். டாக்டர் பாஸ்கரன் தலைமையிலான மருத்துவகுழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
26 பேர் காயம்
கதண்டு கடித்ததில் திண்ணகுளம் பகுதியைச் சேர்ந்த பிரேமா, சந்திரா, சகுந்தலா, சரஸ்வதி, ராஜேந்திரன், மணி உள்பட 26 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து மாலையில் தொழிலாளர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.