காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்

ஆவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-05-28 18:33 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூரில் உள்ள பெரியநாயகி மாதா ஆலய பாஸ்கா தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்குள்ள பெரியநாயகி மாதா ஆலயத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு திடலில் நேற்று அதிகாலை முதலே விராலிமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கீரனூர், இலுப்பூர், திருவெறும்பூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 775 ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அதேபோல ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்திருந்த மாடுபிடி வீரர்களில் அங்கிருந்த மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்து 196 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் 25 நபர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

நேற்று காலை மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டு அடக்கினர். இதில் பல காளைகள் பிடிபடாமல் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியபடி சென்றன. சில காளைகள் களத்தில் நின்று சுற்றி சுற்றி மாடுபிடி வீரர்களை விரட்டி சென்று முட்டியது. அப்போது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள் விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர்.

26 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் மாத்தூர் மணி மகன் மதன்குமார் (வயது 22), காளை உரிமையாளர்கள் மலம்பட்டி ஜேம்ஸ் மகன ்அமலி (18), ராப்பூசல் பாலமுருகன் மகன் லெட்சுமணன் (28) ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மின்விசிறி, டைனிங் டேபிள், மிக்சி, ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை விராலிமலை தாசில்தார் சதீஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விராலிமலை, கீரனூர், ஆவூர், மாத்தூர், திருச்சி, மண்டையூர் சுற்றுவட்டாரம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் கண்டுகளித்தனர்.

பாதுகாப்பு பணியில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டுவேலன் தலைமையில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

காளைகள் அவிழ்க்கப்படாததால்

உரிமையாளர்கள்-விழா குழுவினர் இடையே வாக்குவாதம்

 ஆவூரில் நடைெபற்ற ஜல்லிக்கட்டில் 775-க்கும் மேற்பட்ட காளைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தன. காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது. அப்போது 721 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டிருந்தன. 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்படாமல் இருந்தது. அதனால் ஆத்திரமடைந்த காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு மேடை அருகே இருந்த விழா குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் டோக்கன் பெற்றுக் கொண்டு வெளியூர்களில் இருந்து வாகனத்தில் காளைகளை ஏற்றிக் கொண்டு இங்கு வந்துள்ளோம். இதனால் எங்களது காளைகளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட அனுமதிக்க வேண்டும் என்று விழா குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் ஜல்லிக்கட்டுக்கான நேரம் முடிவடைந்தது. எனவே அனைவரும் காளைகளுடன் கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த காளைகளின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை பெரியநாயகி மாதா ஆலயத்தின் முன்பு நிறுத்தி வைத்து அங்கிருந்து காளைகளை அவிழ்த்து விட முயன்றனர். இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்