கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை 2,591 பேர் எழுதினர்

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 49 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை 2,591 பேர் எழுதினர். இந்த தேர்வினை 1,004 பேர் எழுத வரவில்லை.

Update: 2022-12-04 19:32 GMT

கிராம உதவியாளர் தேர்வு

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 49 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் 49 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 3,595 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 7 மையங்களில் நேற்று நடந்தது.

மின்னணு சாதனங்களுக்கு தடை

இதில் கரூர் வட்டத்திற்கு கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி வட்டத்திற்கு பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியிலும், மண்மங்கலம் வட்டத்திற்கு வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், புகழூர் வட்டத்திற்கு புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும், குளித்தலை வட்டத்திற்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கடவூர் வட்டத்திற்கு தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எழுத்து தேர்வு நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு தேர்வாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வாளர்கள் தேர்வு கூட நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்), கருப்பு பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை தவிர செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதன பொருட்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

2,591 பேர் எழுதினர்

சரியாக காலை 9.50 மணிக்கு தேர்வு தொடங்கி காலை 10.50 மணிக்கு முடிவடைந்தது. 30 மதிப்பெண் கொண்ட தேர்வில் முதல் அரை மணி நேரம் கிராம உதவியாளர் பணி குறித்து அறை கண்காணிப்பாளர் தமிழ் மொழியில் வாசிக்க, அதனை தேர்வாளர் தமிழிலும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில மொழியில் வாசிக்க, அதனை தேர்வாளர் ஆங்கிலத்திலும் எழுதினர்.

கரூர் மாவட்டத்தில் 2,591 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,004 பேர் தேர்வு எழுத வரவில்லை. கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் சைக்கிள் ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்