திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படிதிருவாரூரில் இருந்து திருவள்ளுருக்கு அரவைக்காக 2, 500 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 56 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவள்ளுருக்கு புறப்பட்டு சென்றது.