இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-03-30 18:45 GMT

பனைக்குளம், 

இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசாரும், தனிப்பிரிவு போலீசாரும் வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் ஒரு இடத்தில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்படுவதை பார்த்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பதப்படுத்திய சுமார் 250 கிலோ கடல் அட்டை மற்றும் அதை பதப்படுத்த பயன்படுத்திய பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை மண்டபத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வலைவீச்சு

இது குறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

வேதாளை கடற்கரை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்