சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

டீ வாங்க வந்த சிறுமிக்கு தின்பண்டம் கொடுத்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-04-27 20:40 GMT

மகாதேவன்

டீ வாங்க வந்த சிறுமிக்கு தின்பண்டம் கொடுத்து கர்ப்பமாக்கிய முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை கிராமம் மண்ணியார்கரை தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 62). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இவரது கடைக்கு வந்து டீ வாங்கி செல்வது வழக்கம்.

அதன்படி செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்களுக்காக 16 வயது சிறுமி மகாதேவன் கடைக்கு டீ வாங்க அடிக்கடி வந்துள்ளார். அப்போது சிறுமிக்கு, மகாதேவன் தின்பண்டம் மற்றும் பணம் போன்றவற்றை கொடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி கர்ப்பம்

இதன் விளைவாக சிறுமி கர்ப்பம் அடைந்தார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தனது கர்ப்பத்துக்கு மகாதேவன் தான் காரணம் என சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் அந்த சிறுமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மகாதேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

25 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மகாதேவனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்