சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-10-31 19:42 GMT

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே சாலியக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மகன் சரவணன்(வயது 36). ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சரவணனிடம் அந்த சிறுமியின் பெற்றோர் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த தகவலை அந்த சிறுமி வீட்டில் சொல்லவில்லை. சில மாதங்கள் கழித்து அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதற்கு யார் காரணம்? என விசாரித்தபோது சிறுமியின் கர்ப்பத்திற்கு சரவணன் தான் காரணம் என்பது தெரிய வந்தது.

25 ஆண்டுகள் சிறை

இது குறித்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணனை கைது செய்தார். பின்னர் தஞ்சை போக்சோ கோர்ட்டில் சரவணனை ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நடந்த நேரத்தில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கை போக்சோ கோர்ட்டு நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து சரவணனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்