6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொந்தரவு
திருச்சி கோட்டை கீழதேவதானத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 25). இவர் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 23.7.2020 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், செல்வமணிக்கு விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா பாராட்டினார்.