ரசாயன முறையில் பழுக்க வைத்த 25 டன் பழங்கள் பறிமுதல்

கோவையில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 25 டன் பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Update: 2023-05-10 19:00 GMT

கோவை

கோவையில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 25 டன் பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ரகசிய தகவல்

கோடைகாலம் தொடங்கிவிட்டாலே பழ விற்பனை களைகட்டதொடங்கி விடும். தற்போது கோவையில் உள்ள அனைத்து பழக்கடைகளிலும் மா, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, சப்போட்டா, முலாம்பழம் உள்ளிட்ட ஏராளமான பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைக்காமல் செயற்கை முறையில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைப்பதாக உணவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

45 கடைகளில் ஆய்வு

இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவை சேர்ந்தவர்கள் கோவையில் உள்ள வைசியாள் வீதி, பெரியகடை வீதி, பவளவீதி, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் 8 குழுவாக பிரிந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 45 கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்தனர். இதில் 16 கடை மற்றும் குடோன்களில் ரசாயன பொட்டலங்களை வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

25 டன் பழங்கள் பறிமுதல்

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் ரசாயன பொட்டலங்களை வைத்து பழுக்க வைத்த 22½ டன் மாம்பழங்கள், 2½ டன் சாத்துக்குடி என்று மொத்தம் 25 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பழங்கள் அனைத்தும் உடனடியாக மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அரைக்கப்பட்டது.

இந்த பழங்களின் மதிப்பு ரூ.12 லட்சத்து 56 ஆயிரத்து 400 ஆகும். ரசாயன முறையில் பழங்களை பழுக்க வைத்த 16 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்.

கடும் நடவடிக்கை

கார்பைட் கல், எத்திலின் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சினை, கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்றவை ஏற்படலாம். சில நேரத்தில் சுவாசம் தொடர்பான பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே இதுபோன்று முறையற்ற விதத்தில் ரசாயனங்கள் கொண்டு பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்