ரூ.25 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

வலங்கைமான் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள

Update: 2022-09-25 18:45 GMT

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரகசிய தகவல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆவூர் ரஹ்மானிய நகரில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிைடத்தது.

அதன் பேரில் தனிப்படை போலீசார் மனோகரன் மற்றும் செந்தில் ஆகியோர் கடந்த 5 நாட்களாக அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.

வீட்டை சுற்றிவளைத்த போலீசார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு லாரியில் பண்டல், பண்டல்களாக கொண்டு வந்து அந்த வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து நேற்று காலை தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும், அந்த வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

மூட்டை, மூட்டையாக இருந்தது

இதை தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து கொண்டு போலீசார் உள்ளே சென்று சோதனை செய்தனர். இதில் அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான சாக்கு மூட்டைகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் இருந்துள்ளன. இவற்றை பிரித்து பார்த்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 3 டன் போதை பொருட்கள் இருந்துள்ளன. இதுகுறித்த வலங்கைமான் போலீசாருக்கு தெரிவித்தனர்.

தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போதை பொருட்களை பார்வையிட்டனர்.

ரூ.25 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

இதையடுத்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 3 டன் குட்கா, பான்பாரக் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வலங்கைமான் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய கோவிந்தகுடி பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு வீதியை சேர்ந்த ஜமாலுதீன் (வயது42), அதே பகுதியைச் சேர்ந்த ஷர்புதீன் மகன் பாதுஷா (29) ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கூறுகையில், போதைப் பொருட்கள் பதுக்குவோர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கருடா ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்ட சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் கருடா ஆபரேஷன் மூலம் தற்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்.

வீட்டுக்கு சீல் வைப்பு

இதில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றார்.

பின்னர் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்து வீட்டுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

வலங்கைமான் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்