24 பெருமாள்கள் கருடசேவை
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை நேற்று 4 ராஜவீதிகளில் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை நேற்று 4 ராஜவீதிகளில் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருட சேவை விழா
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜர் தர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
24 கருடசேவையை தரிசித்தால் நான்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும், கருடசேவை தரிசனம் சகல தோஷ நிவர்த்தி தரும் என்பதும் ஐதீகம். ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி 89-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது.
24 பெருமாள்கள்
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 பெருமாள் கோவில்கள் மற்றும் பிற 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருடவாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.
அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் சென்றார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள் ஆண்டாளுடன் வந்தார். இவர்களை தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள், மணிக்குன்னப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், வெண்ணாற்றங்கரை கல்யாண வெங்கடேச பெருமாள், பள்ளியக்கிரஹாரம் கோதண்டராமர், சுங்கான்திடல் லட்சுமிநாராயணன் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், வெங்கடேச பெருமாள், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்குவீதி கலியுக வேங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு ராமசாமி பெருமாள், எல்லையம்மன்கோவில் தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வேங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலஅலங்கம் ரங்கநாத பெருமாள், மேலவீதி விஜயராமசுவாமி, நவநீத கிருஷ்ணசுவாமி, சகாநாயக்கன்தெரு பூலோககிருஷ்ணன், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வேங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டை தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டு தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பக்தர்கள் பரவசம்
24 பெருமாள்களையும் பக்தர்கள் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசமடைந்தனர். அப்போது பக்தர்கள் பெருமாள் சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் ஆடியபடியும், பஜனை பாடியபடி சென்றனர். கருடசேவை விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இன்று (சனிக்கிழமை) நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இன்று காலை 6 மணிக்கு பெருமாள்கள் நவநீத சேவையில் புறப்பட்டு காலை 8 மணிக்கு கொடிமரத்து மூலையை வந்து அடைகிறார்கள்.பின்னர் அங்கிருந்து கீழராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வீதிகள் வழியாக அனைவருக்கும் காட்சி அளித்து வந்த வழியே அவரவர் கோவில்களுக்கு சென்றடைவர்.