சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 24 பேர் கைது

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2023-04-13 08:52 GMT

சென்னை,

16வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே சென்று அமர்ந்து பார்க்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. போட்டிகளை மைதானத்தில் வந்து பார்வையிட ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியானது.

இதே சூழல்தான் சென்னை - லக்னோ இடையிலான போட்டிக்கும் இருந்தது. ஆன்லைன் டிக்கெட்டும் விற்று தீர்ந்த நிலையில், 750 ரூபாய் கொண்ட டிக்கெட்டை சமூக வலைதளம் மூலமாக பலரும் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்கின்றனர். சில நேரங்களில் ரூ.6000 வரையிலும் விற்கப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த போட்டியின் போது டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டிக்கான டிக்கெட்டும் கள்ளச் சந்தையில் விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக கூறப்பட்டது.

டிக்கெட் விற்பனை குறித்து போலீசார் விசாரித்துவந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 24 பேரிடம் இருந்து 62 ஐபிஎல் டிக்கெட்டுகள் மற்றும் ரூ.65,700 ரொக்கத்தையும் பறிமுதல் செய்து சென்னை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்