கலெக்டர் அலுவலகம் முன்பு 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க கோரி வருகிற 24-ந்தேதி கலெக்டர் அலுலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-08 18:45 GMT

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பழனியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் வில்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நூருல்ஹுதா முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜான்சிராணி, பொருளாளர் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாநிலக்குழு முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து பொதுச்செயலாளர் ஜான்சிராணி கூறுகையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை கேட்டு, விண்ணப்பித்து 1½ ஆண்டுகளாக பலர் காத்திருக்கின்றனர். எனவே உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதேபோல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தினசரி 4 மணி நேர வேலை, முழு சம்பளம் ஆகியவற்றை வலியுறுத்தி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள், தனிப்பாதை அமைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்