காஞ்சீபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.24 கோடி பண மோசடி
காஞ்சீபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.24 கோடி பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிதி நிறுவனம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் வாசுதேவன் மற்றும் சுரேஷ் என்பவர் இணைந்து நிதி நிறுவனம் ஒன்றை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கினர். இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் நாள்தோறும் ரூ.1500 வீதம் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்ட்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
ரூ.24 கோடி மோசடி
மேலும் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறி காஞ்சீபுரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிறுவனத்தில் சுமார் ரூ.24 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு சொன்னபடி முறையாக பணம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலத்தையே காலி செய்துவிட்டு 2 பேரும் தலைமறைவாகினர். இதனால் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூட்டாக வந்து நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் புகார் அளித்திருந்தனர். மேலும் சிலர் காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரும் தெரிவித்திருந்தனர்.
2 பேர் கைது
இந்த புகார்களின் அடிப்பைடையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிதி நிறுவன இயக்குநர்களான வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் வாசுதேவன் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் சுரேஷ் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்திற்கு வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் காஞ்சீபுரம் கோாட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காஞ்சீபுரத்தில் 2 நிதி நிறுவன மோசடியை தொடர்ந்து இந்த மோசடி நடந்தது குறிப்பிடத்தக்கது.