கட்டுமான பணிகள் நடந்ததால் அரசுக்கு ரூ.233 கோடி நஷ்டம்

அ.தி.மு.க. ஆட்சியில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடந்ததால் அரசுக்கு ரூ.233 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் கூறினார்.

Update: 2022-12-28 18:45 GMT

அ.தி.மு.க. ஆட்சியில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் கட்டுமான பணிகள் நடந்ததால் அரசுக்கு ரூ.233 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

நாகை மாவட்டத்தில் தமிழக சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்களான சிந்தனை செல்வன், ஜவாஹிருல்லா, பூண்டி கலைவாணன், தலைமை செயலக செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2013-15-ம் ஆண்டில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் வேதாரண்யம் அருகே கோவில்பத்து பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் சேமிப்பு கிடங்கு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் கட்டுமான பணி நடைபெறும் போது கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

அரசுக்கு ரூ.233 கோடி நஷ்டம்

சுனாமி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்ற கட்டுமான பணிகளை எப்படி மேற்கொண்டனர்.

எந்த அடிப்படையில் இதுபோன்ற இடங்களை தேர்வு செய்தார்கள்?. இதனால் அரசுக்கு ரூ.233 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கட்டுமான பணி நடைபெறும் இடத்தை, உலக தரம் வாய்ந்த வல்லுனர்களை கொண்டு ஆலோசனை நடத்தினார்களா? என்பது தெரியவில்லை.

நாகூர் சில்லடி தர்கா, சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்கா குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்