திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 22-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

ராஜகுரு அருள்பாலிக்கும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Update: 2023-04-16 18:45 GMT

ராஜகுரு அருள்பாலிக்கும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜோதிலிங்கம் தோன்றிய திட்டை

பிரளய காலத்தில் உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டபோது இறைவன் ஜோதிலிங்கமாக ஒரு மேட்டுப்பகுதியில் அருள்பாலித்தார். அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர்.

இந்த லிங்கம், மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி, அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும், அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார். இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே தஞ்சை மாவட்டத்தில் உள்ள திட்டை ஆகும்.

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

குருப்பெயர்ச்சி விழா

இங்கு குருபவகான், சாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனிச்சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது குருப்பெயர்ச்சி விழா திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு குருபகவான் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இதை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.

லட்சார்ச்சனை

குருப்பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக அடுத்தமாதம் (மே) 1-ந் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணம் ரூ.300 ஆகும். மேலும் அடுத்தமாதம் 2-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை), 3-ந் தேதியும் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் பரிகார ஹோமம் நடக்கிறது.

இந்த ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ.500 ஆகும். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு ரூ.300, ஹோமத்திற்கு ரூ.500 மணியார்டர் அல்லது வரைவோலையை தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகிய விவரங்கள் மற்றும் சரியான முகவரியுடன் நிர்வாக அதிகாரி, வசிஷ்டேஸ்வரர் கோவில், திட்டை-613003, தஞ்சை மாவட்டம் என்ற முகவரிக்கு அடுத்தமாதம் 1-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பினால் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பிரசாதத்துடன் பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர், குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குருப்பெயர்ச்சியையொட்டி சுபமுகூர்த்த கால் நடும் விழா நடந்தது. என கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்