2- வது நாள் ஜமாபந்தியில் 229 மனுக்கள் குவிந்தன
2- வது நாள் ஜமாபந்தியில் 229 மனுக்கள் குவிந்தன
தளி
உடுமலை, மடத்துக்குளத்தில் நேற்று நடந்த 2- வது நாள் ஜமாபந்தியில் 229 மனுக்கள் குவிந்தன.
ஜமாபந்தி
உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திருப்பூர் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிலிநாதன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து குறிச்சிக்கோட்டை உள்வட்டத்தில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அதற்கு முன்பாக கிராமம் வாரியாக மனுக்கள் பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தனித்தனியாக சென்று மனு அளித்தனர்.
இதில் தனிப்பட்ட உதவிகள் வேண்டுதல் சம்பந்தமாக 81 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் மனுக்கள் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் கண்ணாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக ஜமாபந்தி நடைபெற உள்ளது. அதன்படி பெரியவாளவாடி உள் வட்டத்தில் உள்ள வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், சின்னப்பாப்பனூத்து, பெரிய பாப்பனூத்து, உடுக்கம்பாளையம், புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், ராவணாபுரம், பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று வருவாய்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் தாசில்தார் செல்வி முன்னிலையில் ஜமாபந்தி நடைபெற்றது. துங்காவி உள்வட்டத்துக்குட்பட்ட கடத்தூர், காரத்தொழுவு, துங்காவி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.இதில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு 61 மனுக்கள், நில அளவை சம்பந்தமாக 18 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கேட்டு 5 மனுக்கள், பட்டா மாறுதலுக்காக 12 மனுக்கள், அயன் பட்டா கோரி 5 மனுக்கள், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 7 மனுக்கள், இதர வகையில் 40 மனுக்கள் என மொத்தம் 148 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-