சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசார் குவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ‘டிரோன’கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-26 23:40 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். 2 நாட்கள் அவர் சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை மாலை சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் 44-வது சர்வதேச சதுரங்க போட்டியை தொடங்கி வைக்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை அவர் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

22 ஆயிரம் போலீசார் குவிப்பு

சென்னை மாநகர் முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 4 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள், 26 துணை கமிஷனர்கள் இவர்களில் அடங்குவார்கள். கமாண்டோ படை வீரர்கள், ஆயுதப்படை சிறப்பு காவல் படை வீரர்களும் இடம் பெறுவார்கள்.

பிரதமர் வருகை தர உள்ள சென்னை விமான நிலையம், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தள பகுதி, நேரு உள் விளையாட்டரங்கம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அவர் தங்கும் இடமான கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளிலும், அவர் செல்லும் வழித்தடங்களிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.

பாதுகாப்பு வளையம்

இந்த பகுதிகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா என்று போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் ரெயில், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

'டிரோன்'கள் பறக்க தடை

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் நாளையும், நாளை மறுதினமும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

பிரதமர் செல்லும் பகுதிகளில் உள்ள சாலைகளில் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். இன்று (புதன்கிழமை) மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்