திருப்பரங்குன்றம் மலை குகையில் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பரங்குன்றம் மலை குகையில் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-02-08 21:29 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை குகையில் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

குகையில் கல்வெட்டு

முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குகிறது மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். இக்குன்று முழுவதும் வரலாற்று சிறப்புடையதாக திகழ்கிறது. இக்குன்றில் முற்கால பாண்டியர்களின் பல குடைவரை கோவில்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் ெரயில் நிலையம் எதிரில் உள்ள குன்றின் மேற்குச்சரிவில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் உள்ளன. அதில் மேலே உள்ள குகையில் ஏராளமான கற்படுக்கைகளும் கி.மு.1 மற்றும் கி.பி.1-ம் நூற்றாண்டை சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் உள்ளன. இவை மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேலே உள்ள குகைக்கு போகும் வழியில் அதன் இடதுபுறம் இயற்கையான சிறிய குகை உள்ளது. இதன் உள்ளே ஐந்து கற்படுக்கைகள் உள்ளன. வட்ட வடிவமான இதன் முகப்பு பகுதியில் மழை நீர் உள்ளே செல்லாதவாறு காடி வெட்டப்பட்டுள்ளது. இக்குகையின் விதானத்தின் மேற்கு பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டு இருப்பதை பாறை ஓவியம், கல்வெட்டு, குடைவரைகள் பற்றி ஆய்வு செய்து வரும் மதுரை தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி கண்டுபிடித்து படித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று இக்கல்வெட்டை படி எடுத்து, மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் மீண்டும் படித்தனர்.

தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் கூறியதாவது:- இந்த கல்வெட்டு 2 வரிகளாக இருந்துள்ளது. முதல் வரியில் த, ர போன்ற சில எழுத்துகள் தவிர மற்றவை முழுவதும் சிதைந்துள்ளன. இரண்டாம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை 'யாரஅதிறஈத்த/////வதர' என படிக்கலாம்

கற்படுக்கைகள்

குகையில் வெட்டப்பட்டுள்ள ஐந்து கற்படுக்கைகளை குறிக்க 5 என்ற எண்ணாக 5 கோடுகள் கொஞ்சம் சாய்ந்த நிலையில் தெளிவாக வெட்டப்பட்டுள்ளன. இக்கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் பெயராக 'யாரஅதிற' என்பதைக் கொள்ளலாம். இதன் இறுதியில் உள்ள எழுத்துகளை அதிட்டானம் என முயன்று படிக்கலாம். இதில் 'அ' சிதைந்துள்ளது. அதிட்டானம் என்றால் இருக்கை எனவும் பொருளுண்டு. இது குகையில் வெட்டப்பட்டுள்ள கற்படுக்கையிலான இருக்கையை குறிக்கிறது. அரிட்டாபட்டி, தொண்டூர் ஆகியஊர்களில் உள்ள தமிழிக்கல்வெட்டிலும் 3 கற்படுக்கைகளை குறிக்க 3 கோடுகள் செதுக்கப்பட்டுள்ளது. கடினமான பாறையிலும் கல்வெட்டு சிதைந்திருக்கும் நிலை, "அ" மற்றும் "ர" போன்ற எழுத்துகளின் வடிவமைப்பு, "ஐந்து" என்ற எண்ணைக் குறிக்க ஐந்து கோடுகளை செதுக்கி வைத்திருக்கும் முறை ஆகியவற்றை கொண்டு இதன் மேலே உள்ள 3 குகைக் கல்வெட்டுகளை விட புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலத்தால் முந்தியது என்பதை அறிய முடிகிறது. எனவே இக்கல்வெட்டை கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இக்கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேலும் ஆய்வு செய்து இதன் முழு வாசகத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்