கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் பாலைவனமாகும்; பவானியில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேச்சு

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் பாலைவனமாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2023-08-06 20:50 GMT

பவானி

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் பாலைவனமாகும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.

பொதுக்கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், பவானியில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.பழனிசாமி தலைமை தாங்கினார்.

தலைமைய நிலைய பேச்சாளர் கனல் கண்ணன், மாநில மாநில தலைமை ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவரும், அரசு உறுதிமொழி குழு தலைவருமான தி.வேல்முருகன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

கர்நாடகாவில் எதிரெதிர் கருத்துக்களை கொண்ட பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் மட்டும் 2 கட்சியினரும் ஒத்த கருத்து உடையவர்களாக மாறி தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

ரூ.1,000 கோடியில் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என மத்திய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளனர்.

பாலைவனமாகும்

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழகமே பாலைவனமாகும். பவானி மற்றும் அம்மாபேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள 17 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளன.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உபரி நீர் திட்டம் மூலம் இந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் ஆற்று நீரை ஏரிகளுக்கு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.குணசேகரன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் கோ.வேல்முருகன், ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, ஒலகடம் நகர செயலாளர் ஆறுமுகம், பவானி நகர பொறுப்பாளர் குமரன், ஒன்றிய செயலாளர் நாகராஜ், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் செல்வம், ஈரோடு மாநகர மாவட்ட முன்னாள் செயலாளர் சீனிவாசன், ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இம்மானுவேல் உள்பட கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்