உலக ரத்ததான தினத்தையொட்டி ஒரே நாளில் 218 யூனிட் ரத்தம் சேகரிப்பு- அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தகவல்

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் நடந்த முகாம்கள் மூலம் 218 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தெரிவித்தார்.

Update: 2023-06-14 21:02 GMT


உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் நடந்த முகாம்கள் மூலம் 218 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தெரிவித்தார்.

உலக ரத்த தான தினம்

ஜூன் மாதம் 14-ந்தேதி உலக ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கித்துறை சார்பில் தொடர்ச்சியாக ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் நடந்தது. விழாவில் அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தலைமை தாங்கி, ரத்த தானம் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

இதுபோல், மதுரை மருத்துவக்கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள், அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரியின் என்.சி.சி. அதிகாரிகள் சரவணன், செல்வராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரே நாளில் 218 யூனிட்

இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கித்துறை தலைவர் டாக்டர் சிந்தா கூறியதாவது:-

ரத்ததான தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்ததானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதுபோல், திருமங்கலம் ஓமியோபதி கல்லூரி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, ரத்தம் சேகரிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் முகாம்கள் மூலம் 123 யூனிட் ரத்தமும், அரசு ஆஸ்பத்திரியில் 95 யூனிட் ரத்தம் என மொத்தம் 218 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

மதுரையை பொறுத்தவரை அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவு கர்ப்பிணிகள், விபத்துகளில் காயம் அடைபவர்கள், புற்று நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதால், அவர்களுக்கு அதிக அளவு ரத்தம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனால், நாளுக்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

உடலுக்கு நல்லது

எனவே, வருடத்திற்கு 4 முறை ரத்த தானம் செய்ய மக்கள் முன்வரலாம். சீராக ரத்த தானம் செய்யும் நபர்களுக்கு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான நோய்கள் வருவது குறைவு என ஆய்வு கூறுகிறது. ரத்த தானம் செய்வது உடலுக்கு மிக்க நல்லது. எனவே அனைவரும் எந்த வித தயக்கமும் இன்றி சரியான கால இடைவெளியில் ரத்த தானம் செய்யலாம். மற்றவர்களையும் ரத்த தானம் செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்