நிலத்தகராறு உள்பட 215 புகார்கள் குவிந்தன
போலீசார் நடத்திய குறைதீர்க்கும் முகாம்களில் நிலத்தகராறு உள்பட 215 புகார் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை அனைத்து போலீஸ் நிலையங்களிலும் முகாம் நடந்தது. அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமை தாங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கினர்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலும், துணை சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அந்தந்த துணை சூப்பிரண்டு தலைமையிலும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார் மனுக்களை கொடுத்தனர்.
வேடசந்தூர் போலீஸ் நிலையம்
வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் குறைதீர்க்கும் முகாம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேல்மணி, வேல்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, போலீஸ் நிலைய எழுத்தர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
வேடசந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தங்களது புகார் மனுக்களை கொடுத்தனர். வாரந்தோறும் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படும் என்றும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
215 புகார்கள் குவிந்தன
மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த முகாம்களில் நிலத்தகராறு தொடர்பாக 71 புகார்களும், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக 34 புகார்களும், குடும்ப பிரச்சினை தொடர்பாக 26 புகார்களும், 84 இதர புகார்களும் என மொத்தம் 215 புகார்கள் குவிந்தன.
இந்த புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.