21 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
தக்கலை அருகே பள்ள வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கண்காணிப்பு கேமரா பொருத்தாதது உள்ளிட்ட காரணங்களால் 21 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தக்கலை:
தக்கலை அருகே பள்ள வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கண்காணிப்பு கேமரா பொருத்தாதது உள்ளிட்ட காரணங்களால் 21 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
வாகனங்கள் ஆய்வு
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட பள்ளிக்கூட வாகனங்கள் கோழிப்போர் விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் கவின் ராஜ், தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
தீயணைப்பு கருவியை இயக்கும் முறை
பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டுபோகும் வாகனங்களில் பிரேக், அவசர கால கதவு, தீயணைப்பு கருவி போன்றவைகள் முறையாக இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் சரி பார்த்தனர்.
அதே சமயம் வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும். தீயணைப்பு கருவியை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.
ஆய்வுக்குப்பின் சப் - கலெக்டர் கவுசிக் பேசும் போது, 'பள்ளி வாகன டிரைவர்கள் வாகனங்களை ஓட்டும் போது செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தகூடாது. வாகனத்தின் முன்னால் அல்லது பின்னால் குழந்தைகள் நிற்கிறார்களா? என்று கண்காணிப்பு கேமராவில் பார்த்து விட்டு வாகனத்தை இயக்க வேண்டும்' என்றார்்.
கண்காணிப்பு கேமரா அவசியம்
வட்டார போக்குவரத்து அதிகாரி சசி பேசும் போது, 'வாகனங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் வாகனத்தை பின்னால் எடுக்கும்போது சென்சார் கருவியை பார்க்க வேண்டும், குழந்தைகள் உங்களை டிரைவர் என கூப்பிடுவதில்லை மாமா, அண்ணா என உறவுமுறை சொல்லிதான் அழைக்கிறார்கள். ஆகவே நம் பிள்ளைகளை போல அவர்களை கவனிக்க வேண்டும். நீங்கள் போக்குவரத்து விதி மீறல் இல்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் அது போல் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்திய பிறகுதான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும்' என்றார்.
நேற்று நடந்த ஆய்வில் 192 பள்ளிகளை சேர்ந்த 628 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
21 வாகனங்கள்
அப்போது கண்காணிப்பு கேமரா பொருத்தாதது, அவசர கால கதவு திறக்காதது மற்றும் சிக்னல் இயங்காதது போன்ற குறைபாடு இருந்த 21 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி வாகனங்கள் ஆய்வு நடக்கிறது.