பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை காங்கிரஸ் அறப்போராட்டம்

வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Update: 2022-05-18 11:04 GMT
சென்னை, 

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழக தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்பைக் கண்டித்து நாளை (மே-19) போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை சுப்ரீம்கோர்ட் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே சுப்ரீம்கோர்ட் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்