முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது ஏன்..? - முதல் அமைச்சர் விளக்கம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை,
நடந்துமுடிந்த உள்ளாட்சித்தேர்தலின் போது சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்த சென்னை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "திமுக பிரமுகர் நரேஷ்குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாலும், நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்" என்று அவர் கூறினார். சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வதை கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் முதல் அமைச்சர் தெரிவித்தார்.