புதுவை ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம்
ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம் என அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம் என அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜிப்மர்
மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி புதுவை கோரிமேட்டில் இயங்கி வருகிறது. இங்குள்ள அனைத்து பதிவுகளிலும் தற்போது இந்தி கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்தியில் மட்டுமே எழுத வேண்டும்
அலுவல் மொழி விதி 1976-ன் படி மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதி எண் 7-ன் படி அலுவல் மொழியாக இவை இருக்க வேண்டும்.
ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றிலும் தலைப்புகள், பணிக்கால கணக்குள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். எதிர்காலத்தில் பதிவேடுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் அனைத்தும் முடி ந்தவரை இந்தியில் மட்டுமே எழுத வேண்டும்.
கண்காணிக்கப்படும்
அனைத்து துறைகளின் தலைவர்கள், பிரிவு பொறுப்பாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இந்த விதியை கண்டிப்பாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழுவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறைகளில் அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலமாக இது கண்காணிக்கப்படும். இது தொடர்பாக உதவி தேவைப்பட்டால் இந்தி பிரிவை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு பாதிப்பு
ஜிப்மருக்கு சிகிச்சை பெற வருபவர்கள் பெரும்பாலானோர் தமிழகம், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். எனவே வரும் காலத்தில் இந்த மருத்துவமனையில் உள்ள பதிவேடுகள், சேவை புத்தகங்கள் இந்தியில் மட்டும் இடம்பெற்றால் தமிழ் மொழி மட்டுமே அறிந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.