தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் ரூ.9½ லட்சத்தில் புதிய அச்சு எந்திரம்

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் நூல்களை அச்சிடுவதற்கு அதிநவீன எந்திரம் ரூ.9½ லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-08 14:13 GMT
தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள சரசுவதி மகால் நூலகம் மிகவும் பழமை வாய்ந்த நூலகம் ஆகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார். இம்மன்னரின் சேவையை நினைவுகூரும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.

இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30 ஆயிரத்து 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும், ஏராளமான புத்தகங்களும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும்.

இந்த நூலகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை அச்சு வடிவில் நூலாக வெளியிடப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நூலை அச்சிடுவதற்கான பழைய எந்திரத்திற்கு மாற்றாக ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நவீன எந்திரம் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். ஏற்கனவே இருந்த பழைய அச்சு எந்திரத்தில், நூலை அச்சிட 24 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதில் ஒரு லட்சம் நூல்கள் மட்டுமே அச்சிட முடியும் எனவும், எழுத்துக்கள் காலப்போக்கில் அழிந்துவிடும் தன்மையும் உடையதாக இருந்தன. தற்போது வழங்கப்பட்டுள்ள எந்திரத்தில் 5 லட்சம் பிரதி அச்சிட முடியும் எனவும், செலவும் குறைவாகவே இருக்குமென நூலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்