‘‘தாய் கேர் நெல்லை’’ இணையதள வசதி; கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் கர்ப்பகால சிகிச்சை பெறும் பெண்களுக்கு உதவும் வகையில் புதிய இணையதள சேவையை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-07 16:11 GMT
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாடு மையத்தில், ‘‘தாய் கேர் நெல்லை’’ என்ற இணையதள வசதியை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 

நெல்லை மாவட்டத்தில் உள்ள நகர்புற, மற்றும் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா, மாவட்ட ஆஸ்பத்திரிகளில் கர்ப்பகால சிகிச்சை பெறும் பெண்கள் அனைவருக்கும் அவர்கள் கருவுற்ற காலம் முதல் பேறுகாலம் வரையில் மாநத்தோறும் நடைபெறும் தொடர் சிகிச்சை, வழங்கப்படும் மருந்துகள், தாயின் உடல் நிலை, ஊட்டச்சத்து போன்ற விவரங்கள் ‘தாய் கேர் நெல்லை’ என்ற இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்படும். 

இந்த பதிவுகள் அடிப்படையில் பேறுகால நேரத்தில் அதிக ஆபத்துக்குள்ளாக நேரிடும் பெண்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இதன் மூலம் பிரசவ கால மரணம், குறை பிரசவம் தடுக்கப்படும். குழந்தைகளை தாக்கும் நோய்கள், குறைபாடுகளை கண்டுபிடித்து சரி செய்ய முடியும். இதற்கு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றார்.

மேலும் செய்திகள்