திண்டுக்கல் அருகே வண்டிக்காரன் குளத்தில் மீன்பிடி திருவிழா - போட்டி போட்டு மீன் பிடித்த கிராம மக்கள்...!
திண்டுக்கல் அருகே வண்டிக்காரன் குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப்பட்டியில் வண்டிக்காரன் குளம் உள்ளது. இந்த குளமானது விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாய பணிகள் முடிந்த பின் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மீன்பிடி திருவிழா நடத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் இந்த பகுதியில் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. சமீபத்தில் பெய்த மழையால் வண்டிக்காரன் குளத்தில் மழைநீர் நிரம்பியது. இதனால் 10 ஆண்டுகளுக்குபின் ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும் மீன்பிடி திருவிழா வண்டிக்காரன் குளத்தில் கோலாகலமாக நடை பெற்றது.
இதற்காக புகையிலைப்பட்டி, மடூர், மணியகாரன்பட்டி, ராஜக்காபட்டி பெரியகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் வண்டிக்காரன் குளத்தில் குவிந்தனர். அதனைத் தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் கன்னிமார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் குளத்தில் வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கரையில் குவிந்திருந்த மக்கள் குளத்திற்குள் இறங்கி கச்சா, வலை, கூடை போன்ற பல்வேறு மீன்பிடி சாதனங்களை வைத்து மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.
இதில் விரால், கெண்டை, ஜிலேபி, ரோகு, கட்லா போன்ற நாட்டு வகை மீன்கள் ஏராளமாய் பிடித்தனர். இவர்கள் பிடித்த மீன்களை யாருக்கும் விற்பதில்லை. தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று இறைவனுக்குப் படைத்து சமைத்து சாப்பிட்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் வரும் ஆண்டுகளில் நல்ல மழை பொழிந்து அடுத்த வருடம் விவசாயம் செழிக்கும் என்பது இவர்கள் நம்பிக்கை ஆகும்.