கபிலர்மலை அருகே நார் மில்லில் தீ விபத்து...!
கபிலர்மலை அருகே நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது.
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அப்பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சு தயாரிக்கும் நார்மில் வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு தயாரிக்கப்படும் மஞ்சு நார்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மஞ்சு நாரில் இருந்து பல்வேறு வகையான கயிர்கள் தயாரிக்கப்படுகிறது.
வேலை முடிந்ததும் நேற்று மில்லை பூட்டி விட்டு தொழிலாளர்கள் சென்று உள்ளனர். இந்த நிலையில் நார்மில்லில் உள்ள தேங்காய் மட்டை மஞ்சுவில் திடீரென தீப்பிடித்து புகை மண்டலமாக இருந்தது உள்ளது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நார் மில் உரிமையாளர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர்.
கார்த்திகேயன் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நார்மில் பகுதிக்கு விரைந்து சென்று நார்மில்லில் இருந்த தேங்காய் மஞ்சுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
ஆனால் நார் மில்லில் இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஏராளமான மஞ்சு தீயில் எரிந்து நாசமாயின. கடந்த வாரம் இதே நார் மில்லில் திடீரென தீப்பிடித்து எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.