ரூ.181 கோடியில் கட்டப்பட்ட 208 அரசு பள்ளி கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்

ரூ.181 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 208 அரசு பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

Update: 2022-05-06 00:13 GMT
சென்னை,

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளின் வகுப்பறை கட்டிடங்கள், குடிநீர், கழிவறைகள், மின்சாதனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, ‘‘நம் பள்ளி நம் பெருமை’’ பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நபார்டு திட்டத்தின் கீழ் 66 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.110 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின்கீழ் 140 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.68 கோடியே 88 லட்சத்து 98 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல் மாவட்ட கனிமவள நிதியின் கீழ், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடியே 70 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறை கட்டிடம், மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவன நிதியின் கீழ், கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் ஓய்வு அறை மற்றும் சுற்றுச்சுவர் என மொத்தம் ரூ.181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

நூல் வெளியீடு

கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத்திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கிய திட்டம் ஆகிய 3 திட்டங்களின் கீழ் இதுவரை 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின்கீழ் 5 நூல்கள் மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின்கீழ் 23 சிறார் நூல்கள், அமரர் கல்கி எழுதிய மகத்தான நாவலான ‘பொன்னியின் செல்வன்’ 5 பாகங்களாக முதல்முறையாக மலையாள மொழியில் ஜி.சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மேலும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற குறுநாவலான ‘வாடிவாசல்’ செல்வி மினிபிரியா மொழிபெயர்ப்பில் மலையாளத்திலும், திராவிடச்சிந்தனையில் பெண்ணுரிமையின் வெளிப்பாடாக தமிழில் இதுவரை எழுதியுள்ள பெண் படைப்பாளிகளின் எழுத்துகளில் 30 சிறந்த படைப்புகளை தேர்வு செய்து கவிஞர் அ.வெண்ணிலா தொகுத்த ‘மீதமிருக்கும் சொற்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு ‘தமிழ்ப்பெண் கதைகள்’ என்ற தலைப்பில் வெங்கிடாசலத்தால் மலையாள மொழியாக்கம் செய்யப்பட்ட நூலையும், எடமான் ராஜன் மொழிபெயர்ப்பில் பூமணியின் ‘வெக்கை’ என்ற நாவல், மலையாளத்தில் ‘உஷ்ணம்’ என்ற தலைப்பில் வந்துள்ள புத்தகத்தையும், ‘இமயம் கதைகள்’ என்ற நூலையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

3 இளம் எழுத்தாளர்களுக்கு விருது

குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் நன்னெறி கல்வியை கற்பிக்கவும் ‘இளந்தளிர் இலக்கிய திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தின் சிறந்த சிறார் படைப்பாளிகளான இளங்கோ, ஞா.கலையரசி, வெற்றிச்செழியன், உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதாஜோ, பொற்கொடி, உதயசங்கர், சாலை செல்வம் மற்றும் ஆதி வள்ளியப்பன் ஆகிய 10 எழுத்தாளர்களின் அழகிய ஓவியங்களுடன் கூடிய 23 சிறார் படைப்புகளையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட ர.சக்தி, ந.சுபிஷா, ம.ருத்ரவேல் ஆகிய 3 இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கவிமணி விருதும், விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம், சான்றிதழையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச்செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், இல்லம் தேடி கல்வி சிறப்புப்பணி அலுவலர் க.இளம்பகவத், கூகுள் நிறுவனத்தின் அலுவலர்கள் நிதின் காஷ்யாப், ஹேமந்த், அபிநவ் உன்னி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பயில ‘கூகுள்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்துகொள்ள ஏதுவாக “கூகுள் ரீடு அலாங்” என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் ‘கூகுள்’ நிறுவனத்திற்கு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்