முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி
இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து அரிசி, உயிர் காக்கும் மருந்து பொருட்கள், பால் பவுடர் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்களை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்த தமிழக முதல் அமைச்சருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்திருக்கிறார்.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உதவியுள்ள தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக இலங்கை பிரதமர் தமிழக முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.