நாமக்கல்: ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.4.90 லட்சம் கொள்ளை...!
புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.4.90 லட்சத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், சுமார் 8 வருடங்களாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது.
அதே பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன், கடந்த 2 மாதங்களாக, தினந்தோறும் காலை மற்றும் மாலையில் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் கணேசன் வழக்கம்போல் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்யச் சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து கணேசன், அங்கிருந்த முருகேசன் என்பவரின் உதவியோடு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை திறந்து பார்த்து உள்ளார். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது. மேலும் மையம் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்து உள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஏ.டி.எம். மைய பராமரிப்பாளர் கணேசன், பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலம், சதீஷ்குமார், குமரவேல் பாண்டியன், குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரம் வெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 900 கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் மையத்தின் நுழைவாயிலில் இருந்த எச்சரிக்கை ஒலிப்பானின் ஒயரை துண்டித்துவிட்டு மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி இருப்பதும் தெரிந்தது.
தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது, எவ்வளவு பணம் இருந்தது என்பது உள்பட பல்வேறு விஷயங்களை வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சம்பவம் தொடர்பாக வணிக வளாக கட்டிடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சத்திரம் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.4.90 லட்சத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.