ரெயிலில் வந்த வியாபாரி முகத்தில் ஸ்பிரே அடித்து 5 கிலோ நகை கொள்ளை முயற்சி - 2 பேர் கைது...!

ஜோலார்பேட்டையில் வியாபாரி முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-04 14:38 GMT
ஜோலார்பேட்டை,

கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (44). நகை பட்டறை கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பேரில் இவர் கடைக்கு வரும் நகைகள் வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவரது கடையில் மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து (30), அய்யனார் (23), ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். சென்னை வியாபாரி ஒருவர் ரகுராமிடம் 5 கிலோ நகை ஆர்டர் செயதிருந்தார்.

அந்த 5 கிலோ நகைகளை ஒரு பேக்கில் சிறிய அளவில் பூட்டு போட்டு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் மாரிமுத்துவும், அய்யனாரும் கொண்டு சென்றனர். ரெயில் இன்று அதிகாலையில் ஜோலார்பேட்டைக்கு வந்தது.

அவர்கள் இருந்த அந்த பெட்டியில் கேரள மாநிலத்தை சேர்ந்த அக்ராப் (30), சுராஜ் (26) ஆகியோர் ஏறினர். அவர்கள் இருவரும் நகை வைத்திருந்த பேக்கின் பூட்டை கட் செய்தனர். இதனைக் கண்ட மாரிமுத்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது கொள்ளையர்கள் மாரிமுத்து, அய்யனார் முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். பயணிகள் அவர்களை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்