ரோந்து போலீசார் அதிரடி ஒரு கிலோ கஞ்சாவுடன் அண்ணன் தம்பி கைது மேலும் 2 பேர் சிக்கினர்
ஒரு கிலோ கஞ்சாவுடன் அண்ணன், தம்பியை ரோந்து போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
ஒரு கிலோ கஞ்சாவுடன் அண்ணன், தம்பியை ரோந்து போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா புழக்கம்
புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வடமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் ரெயில்கள், பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதையும் மீறி குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வருவதை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாணரப்பேட்டை ராசு உடையார்தோட்டம் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து அவரை சோதனை செய்தபோது, கஞ்சா மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பதும், அவரது அண்ணன் தர்மா (29) கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன், தர்மா ஆகியோரை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 154 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 2 பேர் கைது
மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் ஐ.டி.ஐ. சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த மரக்காணம் அனுமந்தையை சேர்ந்த விஜய் (20), உருளையன்பேட்டை பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த பிரதீன்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 166 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.