குடிமங்கலம் அருகே சிவப்பு நிறமாக மாறிய குடிநீரால் பரபரப்பு

குடிமங்கலம் அருகே குடிநீர் சிவப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-04 14:11 GMT
குடிமங்கலம்,

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் பொட்டையம் பாளையம், இலுப்பநகரம்,புக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையங்கள் மூலம் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் பெதப்பம்பட்டியை சுற்றியுள்ள அம்மாபட்டி ஆமந்தகடவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக குடிநீர் சிவப்பு நிறத்தில் வருவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

கடந்த சில தினங்களாகவே பெதப்பம்பட்டிபகுதியில் குடிநீர் சேரும் சகதியுமாக சிவப்பு கலரில் வருகிறது. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருகிறதா அல்லது நீரேற்று நிலையங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 

கடந்த சில தினங்களாக குடிநீர் தரமற்ற நிலையில் வருவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையில் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து தரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்