கன்னியாகுமரி சுற்றுலா வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து - டிரைவர் பலி

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கார் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-05-03 05:28 GMT
கன்னியாகுமரி:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அய்யனார்குளம் பட்டியை சேர்ந்த 7 பேர் ஒரு சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு நேற்று சுற்றுலா வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்த்து ரசித்தனர். அதன் பின்னர் அவர்கள் நேற்று இரவு ஊர் திரும்புவதற்காக நெல்லை நோக்கி காரில் புறப்பட்டனர். 

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பக்கம் உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சென்ற போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரவுண்டானா தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஸ்ரீவைகுண்டம் கால்வாயைச் சேர்ந்த டிரைவர் வேல்முருகன் (வயது 37) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் காரில் பயணித்த முருகன், பூவலிங்கம், கந்தசாமி, சுடலை, சின்னத்துரை, பெத்தலிங்கம் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

இறந்த வேல்முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுற்றுலா வந்த இடத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்