ரமலான் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்பு
ரமலான் பண்டிகையை ஒட்டி நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
சென்னை:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான், பக்ரீத் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆண்டுதோறும் வரும் மாதங்களை காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளை பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் நேற்று கொண்டாடினர். மேலும் ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கொண்டாடும் விதமாக இன்று சுன்னத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.