‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை அவகாசம் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Update: 2022-05-02 21:26 GMT
‘நீட்’ தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர 2016-ம் ஆண்டு முதல் ‘நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓராண்டு தாமதமாக 2017-ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (5-ந்தேதி) தொடங்க இருக்கிறது. அதனால் ‘நீட்' தேர்வையும் குறித்த காலத்துக்குள் நடத்தி முடித்துவிட என்.டி.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

11 லட்சம் பேர் விண்ணப்பம்

அதன்படி வரும் ஜூலை மாதம் 17-ந்தேதி ‘நீட்' தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், நாடு முழுவதும் டாக்டர் கனவோடு இருக்கும் பிளஸ்-2 மாணவர்கள் ‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடந்த மாதம் 28-ந்தேதி வரை சுமார் 11 லட்சம் பேர் ‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை 17 லட்சம்வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் வருகிற 6-ந்தேதி இரவுடன் முடிவடைகிறது.

15-ந்தேதி வரை அவகாசம்

இந்த நிலையில் ‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 9 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு 11.50 மணி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விவரங்கள், தேர்வுமுறை, நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்.டி.ஏ. வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இதற்கிடையே, வரும் 21-ந்தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ‘நீட்' தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று 85 சதவீத மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அகில இந்திய மருத்துவசங்கம் சார்பில் ‘ஆன்லைன்' வழியாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்