“பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்” அமைச்சர் பேட்டி

“பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-02 20:27 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் சீராக இயங்காததால், பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில்கொண்டு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தபடி இருக்கிறது.

படிப்பில் கவனம்...

சாதிக்கயிறு கட்டுதல், பஸ்களில் படிக்கட்டில் தொங்கி செல்லுதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களின் வீடு மற்றும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கவரப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்தவுடனும் அது பிரதிபலிப்பதால், இதுமாதிரியான விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக, மாணவர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், உங்களது கவனத்தை படிப்பில் மட்டும் தான் நீங்கள் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங்

இதுபோன்று மாணவர்கள் நடந்து கொள்ளும்போது, அதனை எப்படி கையாள வேண்டும்? என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். அதே நேரத்தில், மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாதவாறு கவுன்சிலிங் வழங்கப்படும். பள்ளி மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், ‘ஊஞ்சல்’ என்ற இதழும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘தேன் சிட்டு’ என்ற இதழும், ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்