விவசாயியை கொன்று நகை கொள்ளை

விவசாயியை வெட்டி படுகொலை செய்த கொள்ளையர்கள் 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-05-01 23:01 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 68) விவசாயி. இவருடைய மனைவி ஜெயமணி (65). மகன்களுக்கும், மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

கணவன், மனைவி 2 பேரும் தினமும் இரவு வீட்டுக்கு வெளியே உள்ள வாசலில் கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு துரைசாமியும், ஜெயமணியும் வீட்டு வாசலில் ஆளுக்கு ஒரு கட்டிலில் படுத்து தூங்கி உள்ளனர்.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டை உடைத்து நள்ளிரவில் வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள் துரைசாமி மற்றும் ஜெயமணியை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துரைசாமி இறந்தார். ஜெயமணி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

பின்னர் கொள்ளையர்கள் வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த 2 பீரோக்கள், சூட்கேஸ் ஆகியவற்றை உடைத்து அதில் இருந்த துணிமணிகளை கலைத்து நகை, பணத்தை தேடி உள்ளனர். இதில் துரைசாமி அணிந்திருந்த மோதிரம், அவருடைய மனைவி அணிந்திருந்த தாலி சங்கிலி மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் உள்பட மொத்தம் 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வலைவீச்சு

இந்த சம்பவம் நேற்று காலை பால்காரர் சரவணன் என்பவர் பால் கொடுக்க சென்றபோதுதான் தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெயமணியை மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்