கோழி இறைச்சியில் புழுக்கள்

வீட்டுக்கு சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-01 18:31 GMT
வீட்டுக்கு சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோழி இறைச்சி
புதுச்சேரி அருகே முள்ளோடை-மதிகிருஷ்ணாபுரம் சாலையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கிச்சென்றார். 
அதனை சமைக்க முயன்றபோது, இறைச்சியில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடமே கொண்டு சென்று காண்பித்து நியாயம் கேட்டார்.
அதற்கு, கடைக்காரர், இதுவரை யாரும் எங்களிடம் வந்து புகார் கூறவில்லை. உங்கள் பணத்தை வேண்டுமானால் திருப்பி வாங்கி கொள்ளுங்கள் என கூறிவிட்டார். இதுபற்றி, பாதிக்கப்பட்ட நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிகாரிகள் விசாரணை
தரமற்ற இறைச்சி விற்கப்பட்டது குறித்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தி, கடையை மூட நடவடிக்கை எடுத்தனர். 
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்