பொதிகை உள்பட 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வினியோகம்
தென்காசி வழியாக இயக்கப்படும் சிலம்பு, பொதிகை, கொல்லம் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.
நெல்லை,
கொரோனா தொற்று காரணமாக பயணிகள் மற்றும் விரைவு ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வந்தது. அந்த ரெயில்களில் முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது தொற்று வெகுவாக குறைந்து விட்ட நிலையில் படிப்படியாக சிறப்பு ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 14ந்தேதி நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர், அனந்தபுரி உள்பட பல ரெயில்களிலும் முன்பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்க கோரி தென்னக ரெயில்வேக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இன்று முதல் மேலும் சில ரெயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி தென்காசி வழியாக இயக்கப்படும் சிலம்பு, பொதிகை, கொல்லம் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா பயண சீட்டு வழங்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்படும் அனந்தபுரி(16723/24) எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ்(16127/28) ஆகிய ரெயில்களில் இன்று பயணச்சீட்டுகளை உடனடியாக எடுத்து பயணிகள் அதில் பயணிக்கலாம்.
இதேபோல் சென்னையில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ்(16101/02), சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ்(16181/16182), சென்னைதிருச்செந்தூர்(16105/06) எக்ஸ்பிரஸ், செங்கோட்டை சென்னைக்கு இயக்கப்படும் தினசரி ரெயிலான பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றிலும் முன்பதிவு இல்லாமல் இன்று முதல் உடனடியாக டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.