கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து
மே தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி:- சர்வதேச தொழிலாளர் தினம் என்று அழைக்கப்படும் மே தினத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது சமுதாயத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நாட்டுக்கான புகழ்பெற்ற சேவைகளுக்காக உழைக்கும் சக்திகளின் தனித்துவமான பங்களிப்புகளை கொண்டாடுவதற்கும், நினைவுகூறுவதற்கும் உகந்த நாள் இது.
நமது தேசத்தை வலுவாகவும், வளமானதாகவும் கட்டியெழுப்புவதில் நமது எண்ணற்ற தொழிலாளர்கள் உறுதியுடன், கடினமாக உழைப்பதற்காக அவர்களை வணங்கி கண்ணியப்படுத்துகிறோம் உழைக்கும் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கடின உழைப்பை ஊக்குவிப்பதற்கும், ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:- தங்களின் தன்னலமற்ற, ஓய்வறியா, நிகரில்லா தியாக உழைப்பின் மூலம் நம்மையெல்லாம் வாழவைத்து கொண்டிருக்கும் உலக தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் உள்ளார்ந்த நன்றி பெருக்கோடு மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்களின் மேன்மைக்கு அடித்தளம் அமைத்த போராட்டங்களின் வெற்றித்திருநாளாக கொண்டாடப்படும் மே தின நாளில் உழைக்கும் தொழிலாளர்கள் வெல்க, வாழ்க என வாழ்த்துகிறோம்.
கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:- தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலையிழப்பால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உரிமைக்குரம் எழுப்பும் நாளாக மே 1-ந்தேதி அமையவேண்டும். உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- உலக தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததின் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. உலகை இயக்கும் பாட்டாளிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்க உறுதி ஏற்போம்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்களின் வாழ்க்கை சிறக்க மின்வெட்டு, கொரோனா இல்லாத ஆண்டாக இந்தாண்டு அமைய வேண்டும். தொழிலாளர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தே.மு.தி.க. எப்போதும் துணைநிற்கும். உழைப்பவர்களே உயர்ந்தவர்கள். உழைப்பால் உயரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- மே 1-ந்தேதியை, தொழிலாளர்களின் உரிமைத் திருநாளாக, உலகம் முழுமையும் தொழிலாளர் சமூகம் கொண்டாடி மகிழ்கின்றது. பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராகப் பொறுப்பு ஏற்றவுடன், மே 1-ந்தேதியை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அந்த நாளைக் கொண்டாடுகின்ற தொழிலாளர்களுக்கு ம.தி.மு.க. சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- மே 1-ந்தேதி, தொழிலாளர்கள் தமது உரிமையை வென்றெடுத்த உரிமை வெற்றி நாள். தொழிலாளி-முதலாளி என்ற பேதம் நீங்கி, அனைவரும் பங்காளிகள் என்ற பெரியாரின் லட்சியம் வளர உறுதி ஏற்போம்.
ஜி.கே.வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், கோகுல மக்கள் கட்சி நிறுவனர்-தலைவர் எம்.வி.சேகர், ஜனநாயக ஜனதாதளம் மாநில தலைவர் டி.ராஜகோபால், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் உள்பட பலரும் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.