திண்டுக்கல்லில் ரூ.206½ கோடியில் 285 புதிய திட்டப்பணிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.206½ கோடியில் 285 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தடுப்பணை
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நீர்வளத்துறை சார்பில் ஆர்.கோம்பை கிராமத்தில் தொப்பையசாமி ஆற்றில் அணைக்கட்டு கட்டும் பணி, நங்காஞ்சியாற்றின் குறுக்கே தங்கச்சியம்மாபட்டி மற்றும் ஜவ்வாதுபட்டி ஆகிய கிராமங்கள் மற்றும் பழனி-தேவஸ்தானம் கோவில் குடிநீருக்காக பாலசமுத்திரம் கிராமம் பாலாறு குடியிருப்புக்கு அருகே தடுப்பணை கட்டும் பணிகள் என ரூ.15 கோடியே 86 லட்சம் செலவில் முடிவுற்ற 5 திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் ரூ.4 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கலை மற்றும் கைவினை பொருட்கள் அறைகள், நூலக அறைகள், கணினி அறைகள், அறிவியல் ஆய்வகங்கள், உயிரியல் ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
செயற்கை நீர்வீழ்ச்சி
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சாணார்பட்டி குறுவட்ட அலுவலருக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு, வத்தலகுண்டு கிராம நிர்வாக அலுவலருக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு, சின்னாளப்பட்டி வருவாய் ஆய்வாளருக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என ரூ.3 கோடியே 58 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் கனிமவள நிதி திட்டம், மறுசீரமைக்கப்பட்ட விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் சிறுமலை ஊராட்சி, வெள்ளிமலை ஓடையில் தடுப்பணையுடன் கூடிய செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் சிறிய பூங்கா, நூலக கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், பொதுச்சாவடி, 2 கலையரங்கங்கள், பயணியர் நிழற்குடை, தானிய கிடங்கு, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பள்ளி கட்டிடம் என ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் 16 முடிவுற்ற திட்ட பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
285 திட்ட பணிகளுக்கு அடிக்கல்
இதேபோல பேரூராட்சிகள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார். ஒட்டுமொத்தமாக ரூ.40 கோடியே 45 லட்சம் செலவில் முடிவுற்ற 60 திட்ட பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளத்துறை, பள்ளி கல்வித்துறை, சமூகநலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் ரூ.206 கோடியே 54 லட்சம் செலவிலான 285 திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 54 ஆயிரத்து 230 பயனாளிகளுக்கு ரூ.364 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
கலந்துகொண்டோர்
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேனியிலும் விழா
முன்னதாக நேற்று காலை தேனியிலும் அரசு விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.114 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்ததோடு, ரூ.74 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 10,427 பேருக்கு ரூ.71 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.