வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வார விடுமுறை என்பதால் நேற்று ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வார விடுமுறை என்பதால் நேற்று ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் மோட்டார் படகுகளில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து, மிதி படகு, துடுப்பு படகுகளில் குடும்பத்துடன் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன. அதே சமயம் தங்கும் விடுதிகளில் கட்டணங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.