ஜோலார்பேட்டை: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி பலியான சோகம்
ஜோலார்பேட்டை அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் நீச்சல் தெரியாமல் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பாஷா என்பவரின் மகன் முஜ்ஜு (வயது16) இவர் அசோக் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
தன்னுடைய சக நண்பர்களுடன் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குதித்து நீச்சல் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று வழக்கமாக மதியம் 2 மணியளவில் தன்னுடைய நண்பர்கள் மட்டும் நீச்சல் அடிப்பதை பார்த்த முஜ்ஜு நீச்சல் பழக ஆர்வம் ஏற்பட்டு அவருடன் இருந்த நண்பர்களுக்கு சொல்லாமல் திடீரென கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நீச்சல் தெரியாத காரணத்தினால் கிணற்றில் குதித்தவர் மேலே வராமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கிணற்றிலிருந்து மேலே வந்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி இறந்த நிலையில் மாணவனின் உடலை மீட்டனர்.
இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனின் தந்தை ஜான் பாஷா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் இவரது மனைவி முபீனா ஒருமகள் மற்றும் 5 மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடைசி மகனான முஜ்ஜு என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நண்பர்களுடன் நீச்சல் பழக ஆர்வக்கோளாறில் கிணற்றில் குதித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.