தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை...!

தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2022-04-30 07:19 GMT
எடப்பாடி, 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில், பெண்கள் பயன்பெறும் வகையிலான இலவச தையல் பயிற்சி முகாமினை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 

அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு இலவச தொழிற்பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக கொங்கணாபுரம் பகுதியில் ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் அதிமுக சார்பில் நவீன தையல் எந்திரத்தின் மூலம் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனை இப்பகுதி பெண்கள் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தெரவித்தார்.

பின்னர், பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சேலம் புறநகர் மாவட்ட கழகச்செயலாளர் பதவிக்கான உள்கட்சி தேர்தல் குறித்த விமர்சனங்கள் உரிய நிர்வாகிகளுடன் பேசி சமாதானம் செய்யப்படும். 

தற்போது புறநகர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், கட்சிக்காக பல்வேறு நிலைகளில் வலிமையான சூழலிலும் சிறப்பாக பணியாற்றியவர் தொடர்ந்து அவர் மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றவார். 

தமிழக முழுவதும் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. கடும் கோடை வெப்பம் நிலவி வரும் சூழ்நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின்வெட்டு ஏற்படாமல் மின்வெட்டு பிரச்சனையை உடனடியாக சீர் செய்திட வேண்டும்.  தமிழக அரசு மின் உற்பத்திக்கு தேவையான கூடுதல் அளவிலான நிலக்கரியை உரிய நேரத்தில் கொள்முதல் செய்திடவேண்டும்.

தமிழகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் உடனடியாக குறைத்திட வேண்டும்.

தஞ்சாவூர் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது விரைவில் நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் நிவாரண உதவிகளை அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்