தமிழ் கலாசாரத்தை இழிவுபடுத்துவதை தமிழக அரசு அனுமதிக்கிறதா? - அண்ணாமலை கேள்வி

தமிழ் கலாசாரத்தை இழிவுபடுத்துவதை தமிழக அரசு அனுமதிக்கிறதா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-04-29 21:53 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் பிரிட்ஜோப் காப்ரா, நடராஜரின் தாண்டவத்தை அணுமின் இயக்கத்தோடு ஆய்வு செய்ததோடு, மிகப்பெரிய நடராஜர் சிலையை ஜெனீவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வடிவமைத்துள்ளார். 

நம் மொழி, மதம், நம்பிக்கை சாராத அணுமின் ஆய்வாளர்களின் பார்வைக்கும், நம் திராவிட மாடலின் பார்வைக்கும் எத்தனை வித்தியாசம்?. மத கோட்பாடுகள் மற்றும் இறை நம்பிக்கையை அவதூறாக பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர்.

ஆளுங்கட்சியின் ஆதரவுடன் இதுபோன்ற தமிழ் மக்களின் மத நம்பிக்கையைச் சிதைப்பதை, அவமானப்படுத்துவதை தமிழக அரசு எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறது?. பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்துவதை இந்த அரசு அனுமதிக்கிறதா?. 

இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான கால அவகாசம் கடந்த பின்பும் ஆளும் அரசு செயல் பட மறுப்பது ஏன்? தவறு செய்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்