காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது
காவலர்கள் காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுரை கூறினார்.
காவலர்கள் காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுரை கூறினார்.
பணி நியமன ஆணை
புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு வந்தவர்களை புதுவை காவல்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.
கடினமான பணி
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரி காவல்துறையில் கடந்த 2015-ல் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு தற்போது தான் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் வயது வரம்பு கடந்ததால் பலருக்கு வருத்தம் உள்ளது. காவலர் தேர்வு நியாயமான முறையில் நடந்துள்ளது. காவலர் வேலை கடினமான பணி. காவல்துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மனதில் வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும். காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது. பொதுமக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழ வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
தகுதி அடிப்படையில்...
இளநிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள், 125 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களும் அறிவித்தப்படி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும். புதுவை மாநிலத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் வேலை வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
அமைச்சர் நமச்சிவாயம்
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
காவலர்கள் பணி ஆணை வழங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. போதை பொருட்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையில் காலம் காலமாக இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்வு காணப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் பக்கபலமாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், புதுவை போலீஸ் ஐ.ஜி.சந்திரன் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் நன்றி கூறினார்.